அறுந்த நிலையில் இணைப்பு ஒயர்கள் காட்சி பொருளானது ‘சிசிடிவி’ கேமரா
திருப்பருத்திகுன்றம்: திருப்பருத்திகுன்றம் நான்கு முனை சந்திப்பில், ‘சிசிடிவி’ கேமராவின் அறுந்த நிலையில் உள்ள இணைப்பு ஒயர்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ‘சிசிடிவி’ கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சி நான்கு முனை சாலை சந்திப்பில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டுள்ள கேமராக்களின் இணைப்பு ஒயர்கள் அறுந்த நிலையில் உள்ளன.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமரா காட்சி பொருளாக மாறியுள்ளதால், கேமரா அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, அறுந்த நிலையில் உள்ள ‘சிசிடிவி’ கேமராவின் இணைப்பு ஒயர்களை சீரமைக்க திருப்பருத்திகுன்றம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.