விடிய விடிய மின் தடையால் தவித்த மக்கள் மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறியதால் பீதி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடை பல மணி நேரமாகியும் சீராகாததால் ஆத்திரமிடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பல இடங்களில் சீரற்ற மின்சாரம் காரணமாக, மின்சாதான பொருட்கள் வெடித்து சிதறியதால் மக்கள் பீதியடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே, கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியதால் மின் தேவை அதிகரித்தது.

தற்போது, கத்திரி வெயில் தாக்கத்தால் பகல் மற்றும் இரவு நேரங்களில், தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவொற்றியூரின், விம்கோ நகர், பாரத் நகர், பாரதியார் நகர் மற்றும் ஸ்ரீரங்கம் நியூடவுன் போன்ற பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மின்சாரம் தடைபட்டு மூன்று மணி நேரமாகியும் சீராகவில்லை. மின் வாரிய அதிகாரிகளும் தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், வள்ளலார் நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். த.வெ.க.,வை சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் மற்றும் போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர்.

வீதிக்கு வந்த மக்கள் அம்பத்துார், கள்ளிக்குப்பம், கங்கை நகரில் உயர் மின்னழுத்த கம்பிகள், அங்குள்ள குடியிருப்புகளை உரசும் அளவில் தாழ்வாக உள்ளது.

அதீத வெப்பத்தால், மின் கம்பிகள் விரிந்து நேற்று அதிகம் தாழ்வாக இறங்கி, என்.எஸ்.கே., தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் உரசியது. வீட்டில் மின்சாரம் பாய்ந்ததால், சுவரின் ஒரு பகுதி உடைந்து, மற்றொரு வீட்டின் மீது விழுந்தது.

மேலும், உயர் மின்னழுத்தத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 'ஏசி, டிவி, மின்விசிறி, லேப்டாப்' உள்ளிட்டவை வெடித்து சிதறின. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் அடைந்தனர். உடனே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அங்கு வந்த மின் வாரிய ஊழியர்களை சூழ்ந்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்பகுதியில், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் தெருவில் நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தபின், பழுது சீர் செய்யப்பட்டு, மின் இணைப்பு வந்தது.

அரை மணி நேரத்தில் திரும்பவும் மின்வெட்டு ஏற்பட்டது. தொடர் மின் தடையால், மக்கள் அவதி அடைந்தனர். ஆத்திரமடைந்த மக்கள், அதே பகுதி கல்லறைச் சாலை நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். ராயபுரம் எம்.எல்.ஏ., விஜய் தாமு மற்றும் போலீசார், உடனடியாக மின் பிரச்னை சரி செய்யப்படும் எனக்கூறி, சமாதானம் செய்தனர்.

17 மணி நேரம் மின் தடை ஆவடி அடுத்த பட்டாபிராம், சேக்காடு பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், 'பீடர்' எனும் மின்னுாட்டியில் கோளாறு ஏற்பட்டது.

இதனால், பட்டாபிராம், சேக்காடு, கோபாலபுரம், தண்டுரை, அணைகட்டுச்சேரி, சோராஞ்சேரி, ஜெ.ஜெ., நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. அனல் காற்றால் துாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். ஐந்து மணி நேரம் கழித்து, அதிகாலை 2:30 மணி அளவில் மின் வினியோகம் சீரானது.

டிரான்ஸ்பார்மர் பழுது பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், வ.உ.சி., தெருவில் உள்ள மின்மாற்றியில், நேற்று முன்தினம் இரவு பழுது ஏற்பட்டது. இதனால், வ.உ.சி., ஆறாவது, ஏழாவது தெருவில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம், பழுது சீரமைத்து, 17 மணி நேரம் கழித்து நேற்று மாலை 4:30 மணிக்கு சீரானது.

வாக்குவாதம் வில்லிவாக்கம், தாங்குப்பத்தில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியள வில், மின் தடை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பகுதி மக்கள், கொளத்துார், பாபா நகரில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் ஒன்று கூடி, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

ராஜமங்கலம் போலீசார், அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர். கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று அதிகாலை 1:40 மணி அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜய் தலையிட்டு, மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண சிறப்புக்கவனம் செ லுத்த வேண்டும் என, சென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement