விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு, மே 23–
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், 17வது பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா, வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இவ்விழாவில், ஆக்சிஸ் வங்கி துணை தலைவர் மீராதேவி பங்கேற்று, 2021– 2024ம் கல்வியாண்டில் பயின்ற 600க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
பின் அவர் பேசியதாவது:
பெண்களுக்கு கல்வி கண் போன்றது. அது, பெண்களுக்கு தன்னம்பிக்கையும், சுய மதிப்பையும் அளிக்கிறது. எதை சாதிக்க நினைக்கின்றோமோ, அதை கல்வியால் மட்டுமே முடியும். அதுமட்டும் இன்றி, தன் தாய், தந்தை, ஆசிரிய பெருமக்கள் மற்றும் தான் கற்ற கல்லுாரிக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். பல்கலைக்கழகத்தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதுகலை வணிகவியல் துறை மாணவி கவிதா, இளங்கலை வங்கி மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த சங்கீதா, வணிக கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த சிவசங்கிரி மற்றும் முதல் 18 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், கல்லுாரி முதல்வர் அருணாதேவி மற்றும் பேராசிரியர்கள், மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.