அதிகரிக்கும் கோடை வெயில் வறட்சியில் கால்நடைகள் தவிப்பு

திருப்புவனம், மே 23-

திருப்புவனம் வட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் காரணமாக கண்மாய், ஊரணி, பள்ளங்களில் தண்ணீரின்றி கால்நடைகள் தவித்து வருகின்றன.

திருப்புவனம் வட்டாரத்தில் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, அகரம், கொந்தகை, பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, எருமை மாடு, ஆடு உள்ளிட்டவைகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பவர்கள் தீவனம் வாங்கி கால்நடைகளுக்கு போடுவதுடன் அவற்றை மேய்ச்சலுக்கு வயல்கள், கண்மாய்களுக்கு அழைத்துச் செல்வார்கள், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. மேய்ச்சல் நிலங்களிலும் பசுமை திரும்பியது. இதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். தொடர்ச்சியாக மழை இல்லாததாலும், பள்ளங்களில் உள்ள தண்ணீர் கோடை வெயில் காரணமாக வற்றியதாலும் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.

கண்மாயில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் வாய்க்கால் வழியாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள், அதில் கால்நடைகளை குடிக்க வைப்பது வழக்கம். கோடை வெயில் காரணமாக தண்ணீர் எளிதில் ஆவியாகி விடுவதாலும், தண்ணீர் சிக்கனம் கருதியும் கிணற்று பாசன விவசாயிகள் பலரும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கண்மாய், குளம், குட்டை, பள்ளங்கள் என எதிலுமே தண்ணீர் இல்லாததால் கால்நடை மேய்ப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கால்நடை மேய்ப்பவர்கள் கூறுகையில்,

ஒருசில மாடு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. பத்து மாடு, ஐந்து மாடு, 100 ஆடு உள்ளிட்டவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. தண்ணீர் இருக்கும் இடமாக பார்த்து நீண்ட துாரத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது, இல்லாவிட்டால் வீடுகளில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்களில் சென்று குடங்களில் தண்ணீர் நிரப்பி வந்து கால்நடைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது, என்றனர்.

Advertisement