விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
கம்பம், மே 23
திராட்சை,வாழையில் உறுதி செய்த வருவாய் உள்ளதால் விவசாயிகளை திராட்சை மற்றும் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கம்பம், கூடலூர், அணைப்பட்டி, ராயப்பன்பட்டி போன்ற ஊர்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஓடைப்பட்டி வட்டாரத்திலும் விதையில்லா திராட்சை சாகுபடி குறைந்து அங்கேயும் பன்னீர் திராட்சைக்கு மாறி உள்ளனர். கம்பம் பகுதியில் ஆயிரம் எக்டேர், சின்னமனூர் வட்டாரத்தில் 1300 எக்டேர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 300 எக்டேர் பரப்பில் திராட்சை சாகுபடியாகிறது.
சாகுபடியில் முதலிடம்: சமீபத்தில் திராட்சை சாகுபடி பரப்பு 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று வாழையும், மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது செவ்வாழை, நாழிப் பூவன் என அனைத்து ரகங்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. வாழை சாகுபடி பரப்பும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் திராட்சை சாகுபடியாளர்கள் வாழைக்கும், வாழை சாகுபடியாளர்கள் திராட்சைக்கும் அடிக்கடி மாறி கொள்வார்கள். ஆனால் இரண்டு பயிர்களும் சாகுபடி பரப்பில் தேனி மாவட்டம் முன்னிலை பெறுகிறது.
நிலையான வருவாய்: இது குறித்து திராட்சை,வாழை சாகுபடியாளர்கள் கூறியதாவது: வாழையில் காஞ்சாரை நோய் அதாவது வெடி வாழை தீர்க்க முடியாத பிரச்னையாகும். திராட்சையில் மழை, பனி காலங்களில் அடிச் சாம்பல் நோய் பாதிப்பிற்குள்ளாகிறது. இதற்கு விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும். உறுதியான வருவாய் என்பதால், கம்பம் பள்ளத்தாக்கில் 30 முதல் 40 சதவீதம் இரண்டு பயிர்களும் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. நிலையான வருவாய் எனபதால் திராட்சை மற்றும் வாழை மகசூல் பரப்பு அதிகரித்து வருகிறது என்கின்றனர்.