கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
கடலாடி: கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.
கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் இங்கு பிரசவம் நடப்பதில்லை. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படக்கூடிய விபத்துக்களில் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தில் டாக்டர்கள் யாரும் இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது.
கடலாடி மக்கள் கூறியதாவது:
கடலாடி தாலுகா மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ரூ. 3.15 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் மருத்துவமனை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. நோயாளிகளின் நலன் கருதி கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்யும் இடமாகவே உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதியை மேம்படுத்த வேண்டும். பிணவறையில் குளிர்சாதன வசதி தற்போது வரை இல்லை. இதனால் வெளியில் இருந்து வாடகை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். பல மாதங்களாக இந்நிலை நீடிக்கிறது. எனவே மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
––