ஓராண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்ட கழிப்பறை

காஞ்சிபுரம், மே 23–

காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டில் திறப்பு விழா நடந்த ஓராண்டில், ஒரு நாள் மட்டுமே திறக்கப்பட்ட கழிப்பறையை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டில், கைலாசநாதர் கோவில் தெரு உள்ளது. இங்கு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2021 – 22ம் நிதியாண்டில், பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தலைமையில், அப்போதைய உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர், 36.25லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை, கடந்த ஆண்டு மே 2ம் தேதி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பூட்டப்பட்ட கழிப்பறை, மஹா சிவராத்திரி நாளான பிப்., 16ம் தேதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் கூறியதாவது:

கழிப்பறை கட்டப்பட்டு, திறப்பு விழா நடந்த ஓராண்டில், கடந்த பிப்., 16ம் தேதி, மஹா சிவராத்திரியன்று கைலாசநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மூடப்பட்ட கழிப்பறை திறக்கப்படவில்லை. கைலாசநாதர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள், தினமும் நான்கைந்து பேர் கழிப்பறை எப்போது திறக்கப்படும் என எங்களிடம் கேட்கின்றனர்.

எனவே, கைலாசநாதர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக, இந்த கழிப்பறையை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement