நெட் / ரயில் அதிக ‘ஆக்குபென்சி’ ரயில்கள் பட்டியலில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ரயில்கள்
திருப்பூர், மே 23–
ஒரு பயணத்தின் போது ஒரே இருக்கையில், வெவ்வேறு நிலையங்களில் வெவ்வேறு பயணிகள் மாறிமாறி அமர்ந்து பயணம் செய்வதை, ‘ஆக்குபென்சி’ என ரயில்வே வகைப்படுத்துகிறது.
அவ்வகையில், அதிக ‘ஆக்குபென்சி’ ரயில்களின் பட்டியலில், திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் தெற்கு ரயில்வே க்கு உட்பட்ட ரயில்கள் நாட்டிலேயே முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து மங்களூருவுக்கு தினசரி இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் (எண்:16650) 267.67 சதவீத பயணிகளுடன் முதலிடம் பெறுகிறது. இந்த ரயில் மறுமார்க்கமாக மங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு (எண்:16649) இயக்கும் போது, 261.23 சதவீத பயணிகளுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
ஞாயிறுக்கிழமை தோறும் திருவனந்தபுரத்தில் இருந்து இந்துாருக்கு இயக்கப்படும் அஹில்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) 266.24 சதவீத பயணிகளுடன் மூன்றாமிடம், தினசரி இயங்கும் திருவனந்தபுரம் – புதுடில்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) 259.88 சதவீத பயணிகளுடன் நான்காமிடமும், வெள்ளிதோறும் இயங்கும் கன்னியாகுமரி – மாதா வைஷ்ணவிதேவி கோவில், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16317) 251.75 சதவீத பயணிகளுடன் ஐந்தாமிடமும் பெற்றுள்ளது.
முதல் ஐந்து இடங்கள் பெற்றுள்ள ரயில்களில், அஹில்யாநகரி, கேரளா, ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் கேரளாவில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக வடமாநிலங்களுக்கு செல்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி சாத்தியம்?
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ரயில் பயணம் துவங்கியது முதல் முடிவு பெறும் வரை ஒரு இருக்கையில் பயணிப்பவரும், இடையிடையே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் போது ரயிலில் ஏறி, இறங்கும் பயணிகள், நின்றபடியே செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், முன்பதிவு, பொது பெட்டிகளும் நிறைந்து வழிகிறது. நுாறு சதவீத இருக்கை என்ற நிலையில் இருந்து, 200 – 270 வரை அதிகரித்து இருப்பதற்கு இதுவே காரணம். இந்த வழியில் முன்பதிவு ஒரு பயணிக்கு கிடைப்பது, பெரும் சவாலாக உள்ளது,’ என்றனர்.