குடிநீர் கட்டணம் குறைப்பு டில்லி முதல்வர் அறிவிப்பு

புதுடில்லி, வீடுகளுக்கான குடிநீர் கட்டணத்தை குறைக்கும் வகையில், எளிமைப்படுத்தப்பட்ட டில்லி குடிநீர் வாரியத்தின் கொள்கைக்கு, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:

டில்லி குடிநீர் வாரியத்தின் கொள்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், டில்லி குடிநீர் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

இதே போல, குடிநீர் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தண்ணீர் கட்டணம் குறையும். பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

தண்ணீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்புக் கட்டணம், நீரின் தேவையின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப்படும். ஒரு சொத்தில் புதிய மேம்பாடு செய்யும் போதோ அல்லது கூடுதல் கட்டுமானத்தின் போதோ மட்டுமே, இந்த கட்டணம் நிர்ணயம் செய்து விதிக்கப்படும்.

குடியிருப்பு காலனிகளில், இ மற்றும் எப் பிரிவு குடியிருப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 50 சதவீதமும், ஜி மற்றும் எச் பிரிவு குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு 70 சதவீதமும், கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்ஸிஜன் பூங்கா முன்னதாக, வடக்கு டில்லி, புராரி பகுதியில் முக்மெல்பூர் கிராமத்தில், 'ஆக்ஸிஜன் பூங்கா' பணிகளை முதல்வர் ரேகா குப்தா துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரேகா, ''டில்லியில் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த, தற்போது துவங்க உள்ள ஆக்ஸிஜன் பூங்காவை போல, நுாறு பூங்காக்கள் உருவாக்கப்படும்,'' என்று கூறினார்.

முக்மெல்பூரில் அமைக்கப்படும் ஆக்ஸிஜன் பூங்காவில் பசுமையான புல்வெளி, திறந்த வெளி, நடைபாதைகள், அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான குடில்கள், அழகு படுத்தப்பட்ட குளம் மற்றும் பல்வேறு வகையான நிழல் தரும் மர இனங்கள் இடம்பெறும்.

Advertisement