நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் கூடலுார் நகரில் மக்கள் அவதி

கூடலுார்: கூடலுார் பழைய கோர்ட் சாலையில், வாகன நெரிசல் அதிகரித்திருப்பதுடன், நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

முதுமலை, மசினகுடி - கல்லட்டி சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு செல்ல, ஐகோர்ட் உத்தரப்படி, 30ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால், கூடலுார் வழியாக ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

இதன் காரணமாக, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு, உள்ளூர் வாகனங்கள், பழைய கோர்ட் சாலையை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சாலையோரம் அமைக்கப்பட்ட நடைபாதையை பலரும், இருசக்கர வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் சாலையில் நடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், ‘கூடலுார் நகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், அமைந்துள்ள இச்சாலையில், மக்கள் இடையூறின்றி நடந்து செல்ல வசதியாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன், நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement