ரூ.82,000 கோடி கடன் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வழங்கியது

@block_B@block_B மும்பை: நாட்டிலுள்ள வங்கிகளின் பணப்புழக்கத்துக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி, 81,590 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியுள்ளதாவது:

வங்கி, நிதித்துறைகளில் தற்காலிகமாக ஏற்படும் பணப்புழக்க தட்டுப்பாட்டை சமாளிக்க, மாறுபடும் வட்டி வீதத்தில் ரிசர்வ் வங்கி கடன் வழங்கும். அவ்வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், வெள்ளியன்று நடைபெற்ற ஏலத்தின் முடிவில், 81,590 கோடி ரூபாய் அளவுக்கு குறுகிய காலக்கடன், குறைந்தபட்சம் 5.26 சதவீத வட்டியில் வழங்கப்பட்டுள்ளது. மே 21 ஏலத்தை விட, வெள்ளியன்று நடந்த ஏலத்தில்தான் வங்கிகளின் தேவை அதிகமாக இருந்தது.

மே 20ல் வங்கித்துறையின், பணப்புழக்க உபரி, 1.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், அடுத்த நாளே அது 58,876.29 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கிகளில் பணப்புழக்கம் கணிசமாகக் குறையும்போது, ஒரே நாள் அவகாசத்தில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்படும்.

அச்சூழலை சமாளிக்கவே, ஏல முறையில் குறைந்த வட்டி வீதத்தில் ரிசர்வ் வங்கியே கடன் கொடுத்து, நிலைமையை சமாளிக்கும். தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு ஏலத்தை ரிசர்வ் வங்கி நடத்தும் என்று நிதிச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement