ரூபாய் மதிப்பு 100ஐ தாண்டினால் என்ன? ரிசர்வ் வங்கி தலையிட தேவையில்லை

புதுடில்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 100ஐ தாண்டி விடாமல் தடுக்கும் முயற்சிகளில், ரிசர்வ் வங்கி ஈடுபட கூடாது என, 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா வலியுறுத்திஉள்ளார்.

தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் தக்கவைக்க, ரிசர்வ் வங்கி தனது அன்னிய செலாவணி கையிருப்பை பெருமளவில் செலவிட கூடாது. 99 மற்றும் 101ஐ போல 100 என்பதும் ஒரு எண் மட்டுமே.

எனவே, ரூபாய் மதிப்பை இயற்கையாகவே சந்தைக்கு ஏற்ப சரிவடைய அனுமதிக்க வேண்டும். ஒரு டாலர் 100 ரூபாயை தொடக்கூடாது என, மனரீதியான தடை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.

கச்சா எண்ணெய் பற்றாக்குறை தற்காலிகமானதாக இருந்தால், தற்போதைய சரிவுக்கு பின், இறக்குமதி செலவு குறைவு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து ரூபாய் மதிப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். ஒருவேளை நீண்டகால சிக்கலாக உருவெடுத்தால், செலாவணி கையிருப்பை குறைத்து ரூபாயை காப்பாற்ற நினைப்பது வீணான செயலாகும். ஏனென்றால், இறுதியில் 100 ரூபாய் என்ற எண்ணை நாம் கடந்தே ஆக வேண்டியிருக்கும்.

தற்போதைய பொருளாதார நிலை 2013ம் ஆண்டை போன்றதல்ல; அப்போது பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. தற்போது சிறப்பான பணவியல் கொள்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. எனவே, இந்த மதிப்பு சரிவால் ஏற்படும் சிறு பணவீக்கத்தை நமது பொருளாதாரம் எளிதாக எதிர்கொள்ளும்.

அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க, டாலர் அடிப்படையிலான வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்பு நிதியையோ அல்லது வெளிநாட்டு கடன்களையோ ரிசர்வ் வங்கி நாடக்கூடாது. இது, நம் நாட்டின் வட்டி சுமையை யே அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

@block_B@ ரூ.48,000 கோடிக்கு டாலர் விற்பனை? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று வர்த்தக நேர முடிவில் 95.60 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் ரிசர்வ் வங்கியின் நேரடி தலையீடே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை விற்பனை செய்திருக்கக்கூடும் என, வங்கியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 77,700 கோடி ரூபாய் குறைந்து 66.13 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.block_B

Advertisement