கோரிக்கை
வேளாண் விற்பனை கிடங்கு அமைக்க விவசாயிகள்… விழுப்புரம் கூட்டுறவு சங்க இடத்தில் அமைக்க ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் வேளாண் விற்பனை கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், வேர்க்கடலை, உளுந்து, எள் மற்றும் பனிப்பயிர்களை விற்பனை செய்ய விழுப்புரம், அரகண்டநல்லுார், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் செயல்பட்டு வருகிறது.
இதேபோன்று, சீசன் நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் நேமூரில் ஏல விற்பனை மையம் அமைத்து, விவசாய விளைபொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு ஏலம் நடத்த போதுமான இடவசதியில்லை. விவசாயிகள் கொண்டுவரும் பொருட்களை சேமிப்பதற்கு போதுமான கிடங்கு வசதியில்லை. விவசாயிகளுக்கு போதுமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஓய்வு அறை ஏதும் இல்லை. இதனால், விவசாயிகள் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக பெரிய வியாபாரிகளும் இந்த ஏலக்கூடத்திற்கு வந்து கொள்முதல் செய்வதில்லை. இதனால், நேமூர் ஏல விற்பனை நிலையத்திற்கு விவசாயிகள் செல்லாமல், விழுப்புரம், விக்கிரவாண்டியில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளுக்கு விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த ஏல விற்பனை நிலையத்திற்கு அரசு சார்பில் மாத வாடகையும் செலுத்தப்பட்டு வருகிறது.
இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத ஏல கூடத்திற்கு மாறாக, விழுப்புரத்தில் கிடங்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விழுப்புரம் பெரியகாலனியில், வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக 2.10 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில், வேளாண் விற்பனை கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மட்டுமின்றி கூட்டுறவு சங்க ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, வேளாண் துறை அதிகாரிகளும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நேமூர் ஏலம் விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்தனர். அங்கு, போதிய வசதிகள் இல்லாததால், விழுப்புரம் பெரிய காலனியில் உள்ள கூட்டுறவு சங்க இடத்தில் வேளாண் விற்பனை கூடம் கட்டுவதற்கும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இது தொடர்பான கோப்புகள் தயாரித்து, அரசுக்கு அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இங்கு வேளாண் விற்பனை கிடங்கு கட்டுவதற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்பதால், அந்த நிதியை பெற்று பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!