வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?

கல்வி வேலைவாய்ப்பு காரணங்களுக்காக சென்னை போன்ற நகரங்களில் மக்கள் குடியேறுவது தொடர்ந்து நடக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியேறுகின்றனர்.

இவ்வாறு, புதிதாக குடியேறும் மக்கள் எப்படியாவது சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக பல்வேறு பிரச்னைகளை சமாளித்து நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வீட்டுக்கான தேடலிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் பொதுவாக பலருக்கும் சில அடிப்படை குழப்பங்கள் ஏற்படுகின்றன. நிலம் வாங்கி, நமது விருப்பத்துக்கு ஏற்ப வீட்டை கட்டி குடியேறுவதா அல்லது தனியார் நிறுவனங்களில் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்கி குடியேறுவதா என்ற நிலையில் தான் குழப்பம் ஏற்படுகிறது.

இதில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் தற்போது வந்துள்ளன. வீடு தொடர்பான வெளிப்புற பராமரிப்பு பணிகள் அனைத்துக்கும் பொறுப்பான ஆட்கள் இருப்பார்கள், இது விஷயத்தில் நாம் எந்த பிரச்னையை சந்திக்க வேண்டியதில்லை என்று அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து கூறப்படுகிறது.

அடுக்குமாடி திட்டங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான கூடுதல் இடவசதி, வாகனம் நிறுத்தும் இட வசதி, தடையின்றி தண்ணீர், மின்சாரம் கிடைக்கும். குறிப்பாக, வீட்டின் பாதுகாப்புக்கு தனியாக ஆட்கள் இருப்பார்கள் என்பதால் அச்சமின்றி வசிக்கலாம்.

இது போன்று ஏராளமான சிறப்பு வசதிகள் அடுக்குமாடி திட்டங்களில் கிடைத்தாலும், என் நிலம், என் வீடு என்று சுதந்திரமாக வசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வு தனி வீடாக அமைந்துள்ளது. தனி வீடு என்ற தேர்வில் இறங்குவோர், அதை வாங்குவதா, கட்டுவதா என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

நிலம் வாங்கி வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது நல்ல நடைமுறைதான் என்றாலும், தற்போதைய சூழலில் இதை செயல்படுத்துவதில் பல்வேறு, பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில், முறையான அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் நிலம் வாங்க வேண்டும்.

அதில் எந்த வில்லங்கமும் இருக்க கூடாது, உரிமையியல் ரீதியான எந்த வழக்கும் இருக்கக்கூடாது என்பது போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். இதற்கு அப்பால் அந்த நிலத்தை சீரமைத்து அதில் வீடு கட்டுவதற்கான முறையான அனுமதியை அரசு துறைகளிடம் இருந்து பெற வேண்டும்.

கட்டுமான பணிகளை துவங்கும் முன்பே, தண்ணீர் வசதிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதையடுத்து கட்டுமான பணிகளை சரியான நபர்களை கொண்டு குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கருத்தில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

நிலத்தில் எந்த வில்லங்கமும் இருக்க கூடாது, உரிமையியல் ரீதியான எந்த வழக்கும் இருக்கக்கூடாது என்பது போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.

***

Advertisement