கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!

புதிதாக வீடு கட்டும் போது, அதில் துாண்கள், பீம்கள் அமைத்த பின் பாதுகாப்பான, தரமான முறையில் மேல் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் சென்ட்ரிங் பலகைகள் அமைத்து அதன் மேல் கம்பி கூடுகள் வைத்து கான்கிரீட் போடுவது தான் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இவ்வாறு கான்கிரீட் மேல் தளம் அமைக்கும் போது அது தான் கட்டடத்தின் அடிப்படை சுமையை அதிகரிக்க காரணமாக அமைகிறது. சுமை மட்டுமல்ல, கட்டுமான பணிக்கான செலவும் வெகுவாக அதிகரிப்பதற்கும் இந்த பணிகள் முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில், சில இடங்களில் கட்டடங்களை உட்புறமாக பார்க்கும் போது அதன் மேல் தளம் பால் சீலீங் இன்றி, இயல்பான முறையில் உட்புறத்தில் அலங்கார நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கும். கான்கிரீட் தளம் அமைப்பதில் இதை எப்படி செய்வது என்ற குழப்பம் ஏற்படும்.

பொதுவாக சென்ட்ரிங் பலகை வைத்து, அதன் மேல் கம்பி கூடுகளை வைத்து அதில் கான்கிரீட் கொட்டும் வழக்கமான நடைமுறைக்கு மாற்று வழிமுறைகள் வந்துவிட்டன. இதில் சென்ட்ரிங் பணியின் போது, கம்பி கூடுகள் வைக்கும் முன், உட்புறத்தில் எத்தகைய வடிவமைப்பு வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் சிறிய அச்சுகளை வைத்து அதன் மேல் கம்பி கூடுகளை வைத்து அதன் பின் கான்கிரீட் கலவை கொட்ட வேண்டும். இதில் மேல் தளத்தின் அடிபாகம் வரை கான்கிரீட் கலவை போடாமல் அச்சுக்கள் தடுத்து புதிய வடிவமைப்பை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட நாட்களுக்கு பின் சென்ட்ரிங் பலகைகளை பிரிக்கும் போது உட்புறத்தில் அலங்கார வடிவமைப்புகள் கிடைக்கும். இதனால், மேற்புறத்தில் ஆர்.சி.சி., ஸ்லாப் வழக்கமான தோற்றத்தில் காணப்பட்டாலும், அதன் எடை மிக குறைவாக இருக்கும்.

வணிக வளாகங்கள், ஸ்டூடியோக்கள், மண்டபங்கள் ஆகியவற்றில் காணப்படும் இந்த வடிவமைப்புகள் தற்போது வீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மேல் தளம் அமைப்பதில் கான்கிரீட் ஸ்லாப் அமைப்பதற்கான செலவு வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமல்லாது, வழக்கமான ஆர்.சி.சி., ஸ்லாப்கள் போன்று இல்லாமல், இதன் எடை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. செலவு, கட்டடத்தின் எடை குறையும் நிலையில் உட்புறத்தோற்றம் மிக அழகாக காணப்படும் என்பதால் மக்கள் இதை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் கான்கிரீட் தளத்தில் நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமோ என்ற அச்சம் தேவையில்லை. உரிய தரக்கட்டுப்பாடு வழி முறைகளை கடைப் பிடித்தால் இதில் நிறைவான பலன்களை பெறலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

வணிக வளாகங்கள், ஸ்டூடியோக்கள், மண்டபங்கள் ஆகியவற்றில் உட்புறத்தில் காணப்படும் இந்த வடிவமைப்புகள் தற்போது வீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement