மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஈவு தொகை வழங்கியது ரிசர்வ் வங்கி

மும்பை: ரிசர்வ் வங்கி, 2025 - 26 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக 2.87 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் இந்த உச்சபட்ச ஈவுத்தொகை அரசுக்கு கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான மத்திய இயக்குநர் குழு, தனது 623வது கூட்டத்தில் இம்முடிவை எட்டியது.

கடந்த 2024 - 25ல் 2.69 லட்சம் கோடி அளவுக்கு ஈவு தொகையை ரிசர்வ் வங்கி, அரசுக்கு கொடுத்தது.

இது, 2023 - 24ஐவிட 27.40 சதவீத உயர்வு ஆகும். அவ்வாண்டில் 2.10 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2022 - 23ல் 87,416 கோடி ரூபாய் அளவுக்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.

“அபாய நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டப்பூர்வ நிதிகளுக்கு மாற்றுவதற்கு முன்பான நிகர வருவாய், 2025 - 26 நிதியாண்டில் 3,95,972.10 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய 2024 - 25 நிதியாண்டில் இது 3,13,455.77 கோடி ரூபாயாக இருந்தது,” என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement