ரூ.2,400 கோடி வருவாய் ஈட்டிய காமராஜர், சென்னை துறைமுகங்கள்

சென்னை, சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து கடந்த நிதி ஆண்டில், 10.70 கோடி டன் சரக்குகளை கையாண்டு, 2,400 கோடி ரூபாய் வருவாயை ஈட்டிஉள்ளன.

இது குறித்து, சென்னை துறைமுக தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா ஆகியோர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

சென்னை துறைமுகமும், காமராஜர் துறைமுகமும் ஆண்டுதோறும் சரக்குகளை கையாளல், வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன. தினமும் சராசரியாக மூன்று லட்சம் டன் சரக்கு கையாளப்படுகிறது. இதன் வாயிலாக, கடந்த ஆண்டில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சென்னை துறைமுகத்தில் 5.79 கோடி டன் சரக்குகளும், காமராஜர் துறைமுகத்தில் 4.90 கோடி டன் சரக்குகளும் கையாளப்பட்டன.

ஒவ்வொரு 80 வினாடிக்கும் இங்கிருந்து ஒரு கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் இரு துறைமுகங்களும் மொத்தம் 2,400 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டிஉள்ளன. இதில், சென்னை துறைமுகம் 1,185.01 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. காமராஜர் துறைமுகம் 1,239.15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

சென்னை துறைமுகம்- மதுரவாயல் நான்கு வழிச்சாலை மேம்பால பாதை திட்டம் 3,570 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக, துறைமுகங்களில் சரக்குகள் கையாளுவது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.

காமராஜர் துறைமுகத்தில் கூடுதலாக சரக்குகளை கையாளும் வகையில், புதிய முனையம் அமைப்பது, கூடுதல் பர்த்கள் அமைப்பது, உள்சாலைகள், ரயில் பாதை கட்டமைப்புகள் ஆகியவை மேற்கொள்ள உள்ளோம். இதனால், காமராஜர் துறைமுகத்தில் வரும் 2030ல் சரக்கு கையாளும் திறனை 10 கோடி டன் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளோ ம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement