அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா ராஜினாமா

1

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அ.தி.மு.க.,வில் நெல்லை புறநகர் மாவட்ட செயலராகவும், அமைப்பு செயலராகவும் இருந்தவர் இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகவும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

சமீபத்திய சட்டசபை தேர்தலில் மீண்டும் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி அணியில் சேர்ந்து, சட்டசபையில் த.வெ.க., பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு வழங்கினார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்று தன் ஆதரவாளர்களுடன் இசக்கி சுப்பையா, மூன்று கார்களில் வந்தார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் வழங்கினார்; அந்த கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். இருவரும் அந்த கடிதத்தைக் காட்டி, போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர்.

அருகில் இருந்த சட்டசபை செயலர் சீனிவாசன் பார்த்து விட்டு, அது அச்சிடப்பட்ட கடிதமாக இருப்பதாக சபாநாயகரிடம் கூறினார். சுதாரித்த சபாநாயகர், இசக்கி சுப்பையாவை தனக்கு அருகே அழைத்து, காதில் விஷயத்தை கூறினார்.

இதையடுத்து, தன் 'லெட்டர் பேடில்' ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி, சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா வழங்கினார். சட்டசபை விதிகளின்படி, கடிதம் கையெழுத்து பிரதியாக இருப்பதால், ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில், நேற்று மாலையில் ஆளும் கட்சியில் இசக்கி சுப்பையா இணைந்தார்.

ஏற்கனவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.

இதுவரை நான்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம் 47ல் இருந்து 43 ஆக குறைந்துள்ளது.

மேலும், பல அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகுவது தொடர்பாக, த.வெ.க., தலைமையுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவி விலகியது ஏன்?




அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள், என்னை மூன்று முறை வெற்றி பெற வைத்தனர். தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம். தொகுதி மக்களின் நலன் கருதியே என் செயல்பாடு அமைந்துள்ளது.

எனக்கென தனி விருப்பு, வெறுப்பு கிடையாது. ஐந்து ஆண்டுகள் தொகுதி மக்கள் கஷ்டப்பட்டு விட்டனர். தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளேன். முதல்வர் விஜய் நன்றாக ஆட்சி செய்கிறார். வாய்ப்பு கிடைத்தால், அவரை சந்தித்து பேசுவேன். என் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு கூறியுள்ளது அவர்களது முடிவு. அதை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு மனதில் தோன்றியதை நான் செய்துள்ளேன்.

-இசக்கி சுப்பையா

அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,

Advertisement