ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து வழித்தடம் அனைவருக்கும் திறந்தே இருக்கும்; அதிபர் டிரம்ப் உறுதி

9


வாஷிங்டன்: ''ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து வழித்தடம் அனைவருக்கும் திறந்தே இருக்கும்; அமெரிக்கா அதனை கண்காணிக்கும். ஆனால் எந்த நாடும் அதனை கட்டுப்படுத்தப் போவதில்லை'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது. ஈரானுடன் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம். அவர்களின் கடற்படை போய்விட்டது, விமானப்படை போய்விட்டது, எல்லாமே போய்விட்டது. தற்போது ஏதுமில்லாமல் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்வது; மற்றொன்று, தாக்குதல் நடத்தி வேலை முடிப்பது ஆகும். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து வழித்தடம் அனைவருக்கும் திறந்தே இருக்கும்; அமெரிக்கா அதனை கண்காணிக்கும். ஆனால் எந்த நாடும் அதனை கட்டுப்படுத்தப் போவதில்லை. ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. கடுமையான வீழ்ச்சியில் இருக்கிறது. பணவீக்கம் 250 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஈரான் நாணயம் அதன் மதிப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது. அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் சீர்குலைந்துவிட்டது. ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. அவர்கள் அதை உடனடியாகப் பயன்படுத்திவிடுவார்கள். நான் இதை நமக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும் செய்கிறேன். எந்தவொரு பொருளாதாரச் சலுகைகளையும் பெறாமல், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டியிருக்கும். ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யா அல்லது சீனாவிடம் ஒப்படைப்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement