யானை தாக்கி சிறுவன் பலி: தமிழக - கேரளா சாலையில் மறியல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாக்கனா என்ற இடத்தில், சாலையில் நடந்து சென்ற சிறுவன் யானை தாக்கி பலியான நிலையில், பொதுமக்கள் தமிழக - கேரளா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பந்தலூர் அருகே புத்தூர் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், 8-ம் வகுப்பு படித்து வந்த இவரது 14 வயது மகன் மிஷாப், நேற்று இரவு 7-30 மணிக்கு, முடி வெட்டுவதற்காக வீட்டிற்கு அருகே உள்ள பாக்கனா என்ற இடத்தில் செயல்படும் சலூன் கடைக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் நின்றிருந்த யானை ஒன்று, சிறுவனை தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, யானையை துரத்தி சிறுவனை மீட்டு சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்ட நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


பாதிக்கப்பட்ட பகுதியில் வண்டலூர் தாசில்தார் துரைசாமி, டி.எஸ்.பி. வசந்தகுமார், வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததுடன், அப்பகுதியில் என்ற யானையை வனத்துறையினர் உதவியுடன் வனத்திற்குள் துரத்தினார்கள். எனினும் தொடர்ச்சியாக இந்த பகுதிக்கு யானை வந்து செல்லும் நிலையில், கிராமத்தை சுற்றிலும் அகழி அமைத்து, சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.
உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு சொந்த வீடு இல்லாத நிலையில், அரசு வீட்டுமனை வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து, உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, தமிழக கேரளா இணைப்பு சாலையில், முக்கட்டி என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கூடலூர் ஆர். டி. ஓ. குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement