வடலுார் அருகே பெண் கொலை ? கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் மீட்பு

வடலுார்: வடலுார் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், வடலுார்–கும்பகோணம் வி.கே.டி சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் அருகே வடலுார் புறவழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.

அந்த பகுதியில் நேற்று காலை, அங்கு கொட்டப்பட்டிருந்த மண் குவியலில், பெண் சடலம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் கண்டனர். முகம் மற்றும், கால்கள் வெளியே தெரிந்த நிலையில் சடலம் கிடப்பது குறித்து வடலுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க பெண், கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சடலம் மீட்கப்பட்ட பகுதியில் மோப்பநாய் வெற்றி வர வைக்கப்பட்டு அருகில் இருந்த மோட்டார் கொட்டகை வரை ஓடி நின்றது.

கடலூரில் இருந்து வந்திருந்த விரல் ரேகை பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர் மற்றும், சப் இன்ஸ்பெக்டர் கவுசல்யா சம்பவ பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.

விருத்தாச்சலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ பகுதியில் நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து ஆபத்தாரணபுரம் வி.ஏ.ஓ., ஸ்ரீ ராமன் வடலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, சடலம் மீட்கப்பட்ட பகுதியின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

சடலமாக கிடந்த பெண் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலையானாரா, வேறு இடத்தில் கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து வீசப்பட்டாரா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வி.கே.டி சாலை அருகே பெண் சடலமாக மீட்கப்பட்டது, வடலூர் சுற்றுப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement