பார்லிமெண்ட்டில் எதிரொலித்த புதுச்சேரி குரல் : அணையாமல் எரியும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு தனித்துவமான அரசியல் அமைப்பைக் கொண்டது. இங்கு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 30 எம்.எல்.ஏ.,க்களுடன், மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்படும் 3 நியமன எம்.எல்.ஏக்கள் இடம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டசபையின் மொத்த பலம் 33 ஆக உயர்கிறது.தொடக்கத்தில் இது ஒரு சாதாரண விதியாகக் கருதப்பட்டாலும், பிற்காலத்தில் மாநிலத்தின் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் மற்றும் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு அரசியல் ஆயுதமாக இது உருவெடுத்தது.
யூனியன் பிரதேசங்கள் சட்டம், 1963 பார்லிமெண்ட் விவாதத்திற்கு வந்தபோதே, அதன் விதி 3, உபவிதி (3) கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 1963 மே 4 அன்று லோக்சபாவிலும், மே 10 அன்று ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதங்கள், இன்று புதுச்சேரியில் நடக்கும் அரசியல் கூத்துக்களை அன்றே துல்லியமாகக் கணித்திருந்தன.
வாசுதேவன் நாயர், சுரேந்திரநாத் திவேதி, டாக்டர் எல்.எம். சிங்வி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நியமன முறையைத் தீவிரமாக எதிர்த்தனர். மத்திய அரசு இந்த விதியைப் பயன்படுத்தி யூனியன் பிரதேசங்களின் உள்ளூர் ஆட்சியில் தங்களுக்குச் சாதகமாகத் தலையிடும். 30 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட சிறிய அவையில், 3 நியமன எம்.எல்.ஏக்கள் என்பது 10 சதவீதத்திற்கு பலத்திற்குச் சமம். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், இந்த 3 இடங்களைக் கொண்டு சிறுபான்மை அரசைப் பெரும்பான்மை அரசாக மாற்ற மத்திய அரசு முயலும்.தேர்தலில் தோற்றவர்களுக்கும், ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தஞ்சம் அளிக்கும் இடமாக இது மாறிவிடும் என்று அழுத்தமாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தச் சட்டம் முழுக்க முழுக்க பொதுநலன் சார்ந்தது என வாதிட்டார். 1963 மே 10 அன்று மாநிலங்களவையில் அவர் முன்வைத்த வழிகாட்டுதல்களை கருத்துகளாக வெளியிட்டார். “நியமனம் என்பது தவறானது அல்லது ஜனநாயக விரோதமானது என்று கருத வேண்டியதில்லை. உண்மையில், குறிப்பாக, இத்தகைய பிரதேசங்களில் நியமனங்கள் மிகவும் முக்கியமானவை. பல்வேறு சமூகங்களும், பழங்குடியினங்களும் உள்ளன. தேர்தல் மூலம் அவையில் இடம்பெற முடியாத அத்தகைய சமூகங்களுக்கும், பழங்குடியினங்களுக்கும் நியமன வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும். அதோடு பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க விரும்புகிறோம். ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு நியமனத்தின் மூலம் இடம் வழங்கலாம்.இரண்டு பிரிவுகளுக்குள் மட்டுமே நான் என்னை வரையறுக்க விரும்பவில்லை. கல்வியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தேர்தலில் பங்கேற்காத சிறந்த தகுதியான நபர்களும் இருக்கலாம். அவர்களுக்கும் சட்டசபைத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவது பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய தொழில்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் தகுதியானவர்களின் ஆலோசனைகள் சட்டமன்றத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்கள் அவையில் இருந்தால் நிச்சயமாக மதிப்புமிக்க பங்களிப்பை வழங்க முடியும். இந்த நியமன அமைப்பு கட்சி அல்லது அரசியல் நலன்களுக்காக அல்லாது, பொதுநலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அவையில் அவர் உறுதியளித்தார். ஆனால், காலப்போக்கில் இந்த லட்சியவாதம் தவிடுபொடியாக்கப்பட்டது. வழக்கமாக, புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் மாநில அரசு பரிந்துரைக்கும் பட்டியலையே மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்று, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமிக்கும். இதுவே கூட்டாட்சித் தத்துவத்தின் மரபாக இருந்தது. ஆனால், சமீபத்திய தசாப்தங்களில் இந்த மரபு உடைத்தெறியப்பட்டது.
இன்று மீண்டும் புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த நியமன விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மத்திய அரசு தனது சொந்தக் கட்சிக்காரர்களை மட்டுமே நியமிக்குமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு இடங்களை ஒதுக்குமா லால் பகதூர் சாஸ்திரி கூறியது போல் கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இடம் தருமா.. என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நியமன எம்.எல்.ஏ., சட்டம் கொண்டு வரும்போதே புயலை கிளப்பிய விவகாரம் இன்று வரைக்கும் அணையாமல் புதுச்சேரியில் எரிந்து கொண்டு இருக்கின்றது.
@block_B@ பாக்ஸ்விதிமுறை என்ன சொல்லுது முன்னாள் எம்.பி., ராமதாஸ் கூறுகையில், 1963 ம் ஆண்டின் யூனியன் பிரதேசங்கள் சட்ட் விதி 3, உபவிதி (3)- யின் படி புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்விதியில் மத்திய அரசு மூன்றுக்கும் மிகாமல் அரசு ஊழியர் அல்லாதவர்களை புதுச்சேரி சட்டசபைக்கு நியமிக்கலாம் என்பதாகும். இச்சட்டத்தில், நியமனத்திற்கான நோக்கம், நியமிக்கப்படுபவர்களின் தகுதிகள் அல்லது அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய பிரிவுகள் குறித்து வெளிப்படையான விதிமுறைகள் கூறப்படவில்லை. இது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, மாநில அரசினை கலந்து ஆலோசிக்காமல் நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்து கொள்கின்றது. இருப்பினும் இச்சட்டம் பார்லிமெண்ட்டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர், நியமனத்தின் நோக்கத்தையும் எந்தப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார். அதன்படிதான் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுவே புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான சட்டத்தின் நோக்கம். அவரது வலுவான வாக்குறுதிகள்தான் சட்டத்தின் வழிகாட்டுதல்கள். அதன் படியே நியமனம் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.block_B