ஆர்.புதுப்பட்டியில் தொடர் மின்தடைகுழந்தைகள், பொதுமக்கள் அவதி
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர். புதுப்பட்டி டவுன் பஞ்.,ல், 10,000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில வாரங்களாகவே மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்படாத மின்தடை அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. இதனால் சீரான மின் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏற்கனவே சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு, 8:00 மணியளவில் ஆர்.புதுப்பட்டி பகுதியில் திடீரென மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். தற்போது, கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம் இல்லாததால் மின்விசிறி வசதியின்றி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்தனர். முக்கியமாக இரவு நேரங்களில் இதுபோல் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அறிவிக்கப்படாத இந்த மின்தடையால் துாக்கமின்றி தவிக்கிறோம். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை' என்றனர்.