உரம் பூச்சி மருந்து விலை உயர்வுகிசான் சங்கம் கண்டனம்


ராசிபுரம்:உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை உயர்வை கண்டித்து, 'பாரதீய கிசான்' சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், ஏற்கனவே போதிய மழையின்றி விளைச்சல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் தொல்லையால் விவசாயிகள் கடந்த சில காலங்களாகவே பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இத்தகைய சூழலில் விவசாய இடுபொருட்களின் விலை தற்போது திடீரென அதிகரித்துள்ளது.

உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் வரலாறு காணாத விலை உயர்வை, பாரதீய கிசான் சங்கம் வன்மையாக கண்டித்தது. இதுகுறித்து, தமிழக பாரதீய கிசான் சங்க மாநில இளைஞரணி தலைவர் பாலசுப்ரமணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பருவமழை பொய்த்தது மற்றும் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் கடன் சுமையில் தவித்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த திடீர் விலை உயர்வு மேலும், கடுமையாக பாதிக்கும். விவசாய செலவுகள் தற்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த விவசாய தொழிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும். உயர்த்தப்பட்ட உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் விலையை உடனடியாக குறைத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயமே நாட்டின் முதுகெலும்பாகும். அதை காப்பதே நம் கடமையாகும். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்காகவும், இந்திய விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement