ரூ.33,000த்தில் கட்டிய வீட்டிற்கு பராமரிப்பு செலவு ரூ.20 லட்சம்; நுாற்றாண்டு விழா எடுத்த குடும்பத்தார்

2


காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூரில், 100 ஆண்டு பழமையான வீட்டிற்கு குடும்பத்தினர் விழா எடுத்தனர்.

சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பி.எம்.ஏ., வீதியில், 'சிதம்பர விலாஸ்' வீடு உள்ளது. 1924ம் ஆண்டு அண்ணாமலை என்பவரால், 33,000 ரூபாய் செலவில் இந்த வீடு கட்டப்பட்டது. தற்போது, ஐந்தாவது தலைமுறையாக வீட்டை பராமரித்து வருகின்றனர்.

பாரம்பரிய செட்டிநாட்டு முறையில், 1 ஏக்கரில் பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகளுடன், அரண்மனை போல தோற்றம் அளிக்கிறது. தற்போது, வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்துள்ளனர். அதற்கு, 20 லட்சம் ரூபாய் செலவானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீட்டை, தங்களுக்கு வழங்கிய தன் பூட்டனிற்கும், கட்டடத்தை கட்ட உதவிய தொழிலாளர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, குடும்பத்தார்கள் வீட்டிற்கு நுாற்றாண்டு விழா எடுத்தனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை, ஓசூர், முக்தாபாய் பஜனை மண்டலி அறக்கட்டளை, ஸ்ரீபிரியா குமார் குழுவினரின் பஜனை நடந்தது. மாலையில் பட்டிமன்றம், கலாசார நிகழ்ச்சி, ஸ்ரீ ராதாகிருஷ்ணர் வீதி உலா நடந்தது.
இரவு பூஜை, தியானம், திவ்ய நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுடன் வீட்டிற்கான நுாற்றாண்டு விழா களைகட்டியது.

Advertisement