வெற்றி தரும் விசாகன் மே 30 - வைகாசி விசாகம்
எப்போதும் வெற்றி
முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம். 27 நட்சத்திரங்களில் இது 16வதாக உள்ளது.
இந்த நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் அவதரித்தார்.
வி - பறவை (மயில்) சாகன் - பயணிப்பவன்.
இந்த நட்சத்திரத்தால் முருகப்பெருமானை 'விசாகன்' என அழைக்கிறோம். இவரை வழிபடுபவர்களுக்கு எப்போதும் வெற்றியே.
முருகனின் பெயர்கள்
அசுரர்களின் கொடுமை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை காப்பாற்ற நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார் சிவபெருமான்.
அவை சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களிடம் ஒப்படைத்தார் திருமால். அந்தக் குழந்தைகளை காண சிவனும், பார்வதியும் சரவணப்பொய்கைக்கு வந்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் அணைத்து ஒரே குழந்தையாக்கி 'கந்தன்' என பார்வதி பெயரிட்டாள். கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் 'கார்த்திகேயன்' என்றும் முருகனுக்கு பெயர் வந்தது.
விசா கிடைக்கலையா...
ஞானப்பழத்தை அடைவதற்காக விநாயகரும், முருகனும் போட்டி போட்டனர். உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறாரோ அவருக்கே பழம் என்றார் சிவபெருமான். அதை கேட்ட முருகன் தன் வாகனமான மயில் மீதேறி உலகை சுற்றி வரப் புறப்பட்டார்.
ஆக, முதன் முதலில்
விசா(வி - பறவை) எடுத்து உலகை சுற்றியவர் முருகப்பெருமான். அதனால் தான் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் இருந்தாலும், செல்ல வேண்டிய நாட்டின் அனுமதியான 'விசா' கிடைத்தால் தான் அங்கு செல்ல முடியும். விசா பெற காத்திருப்பவர்கள் வைகாசி விசாகத்தன்று முருகனை வழிபட்டால் வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
முருகனின் அவதாரம்
அருளாளர்கள் யாவரும் அவதார புருஷர்களே. திருவள்ளுவர், ஆதிசங்கரர், ராமானுஜர், அருணகிரிநாதர் போன்றவர்கள் மக்களின் மனதில் புரையோடிக் கிடந்த அறியாமையை போக்கினர். தர்ம சிந்தனை மூலம் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்லி நல்வழிப்படுத்தினர்.
இவர்களில் முக்கியமானவர் திருஞானசம்பந்தர். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களை நல்வழிப்படுத்தினார் என்கிறார் சேக்கிழார்.
முருகனின் அடியவரான அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலில் திருஞானசம்பந்தரை முருகனின் அவதாரமாக போற்றுகிறார்.
கால் பதித்த முருகன்: கோப்பில் கையெழுத்திடும் அதிகாரி அதனடியில் தன் பதவியை விளக்கும் முத்திரையை பதிப்பது வழக்கம். அதற்கு முன்பாக முத்திரை சரியாக உள்ளதா என ஒரு பேப்பரில் வைத்து சரி பார்ப்பார்.
அதைப் போல முருகப்பெருமான் தன் வாகனமான மயில், இந்திரன் முதலான தேவர்களின்
தலையில் தன் கால்களை வைத்து முத்திரை பதித்தார். அதன் பின்னரே திருப்புகழ் ஏட்டில் கால் பதித்தார். கந்தர் அலங்காரம் என்ற நுாலில் இந்த பாடல் உள்ளது.
தாவடி ஓட்டு மயிலிலும்
தேவர் தலையிலும்
என்பாவடி ஏட்டிலும்
பட்டதன்றோ படிமாவலிபால்
மூவடி கேட்றன்று
மூதண்ட கூடமுகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்
மருகன் தன் சிற்றடியே.
வருமானம் அதிகரிக்க...
வருமானம் வரும் விதத்தில் பாடல் ஒன்றை சொல்லுமாறு
காஞ்சி மஹாபெரியவரிடம் வேண்டினார் ஒருவர்.
மஹாபெரியவரும் கந்தரனுபூதியில் இருந்து ஒரு பாடலைச் சொல்ல அவரும் சிக்கென பிடித்துக் கொண்டார். வருமானம் கிடைக்க இப்பாடலை தினமும் பாடுவோம்.
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே.

மாற்றம் நிச்சயம்
முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உள்ளன. இதை தரிசிப்பவர் வாழ்வில் மாற்றம் நிச்சயம் ஏற்படும். அது என்ன தெரியுமா...
திருப்பரங்குன்றம்: திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை சிறக்கும்.
திருச்செந்துார்: எதிர்ப்பு அடங்கும். தைரியம் அதிகரிக்கும். சாதனை செய்வர்.
பழநி: நோய் தீரும். பாவம் அகலும்.
சுவாமிமலை: ஞானம் உண்டாகும். கல்வி வளர்ச்சி.
திருத்தணி: கோபம் தணியும். அமைதி, நிம்மதி கிடைக்கும்.
சோலைமலை: பக்தி, செல்வம் பெருகும். நினைத்தது நிறைவேறும்.
தெரியுமா உங்களுக்கு...
* முருகனின் பாடல்களில் முதன்மையானது திருமுருகாற்றுப்படை.
* முருகனின் திருப்புகழை பாடுவோருக்கு எந்தக் குறையும் வராது.
* முருகனின் வலது கைகளில் இருப்பவை: அபய கரம், கோழிக்கொடி,
வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்.
இடப்புற கைகளில் இருப்பவை: வரத கரம், தாமரை, மணி, மழு,
தண்டாயுதம், வில்.
* முருகனின் சீடர்கள்: கடவுள் - சிவன், முனிவர் - அகத்தியர், நரன்(மனிதன்) - அருணகிரிநாதர்
* விரதமிருந்து காவடி, பால்குடம் எடுப்பவர்களை முருகனாகவே பாவித்து வழிபடும் வழக்கம் இன்றும் சில இடங்களில் உள்ளது.
* கந்த சஷ்டி கவசத்தை தினமும் ஆறு முறை பாடினால் எதிரி தொல்லை இருக்காது. நோய் வராது. மன நிம்மதி உண்டாகும்.
* வியாழன் தோறும் முருகன் அடியார்களுக்கு வெள்ளை, சிவப்பு, பச்சை நிற பூக்களை வைத்து வழிபடுங்கள்.
ஓம் வடிவத்தில்...
தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் முருகன் தலங்கள் சிலவற்றை நேர்கோட்டில் இணைத்து பார்த்தால் ஓம் வடிவில் இருக்கும்.
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்துார்
3. பழநி
4. சுவாமிமலை
5. திருத்தணி
6. சோலைமலை
7. மருதமலை
8. வடபழநி
9. வைத்தீஸ்வரன் கோவில்
10. நாகப்பட்டினம் சிக்கல்
11. திருச்சி வயலுார்
12. ஈரோடு சென்னிமலை
13. கோபி பச்சமலை
14. கரூர் வெண்ணெய்மலை
15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17. கேரளா ஹரிப்பாடு
பல அரிய தகவல்களை தொகுத்து வழங்கிய பக்தருக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா