திருத்தணி கோவிலில் வைகாசி விசாகம் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வைகாசி விசாகம் விழாவில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, உற்சவர் சண்முக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முருகன் பிறந்த நாளான மே 30, வைகாசி விசாகமாக முருகன் கோவிலில் கொண்டாடப்படுவதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, பொது வழியில் இரண்டு மணி நேரமும், 100 ரூபாய் தரிசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலும் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள், காவடி எடுத்தும், தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

திருத்தணி ஏ.எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலைக்கோவிலுக்கு இரு சக்கர வாகனங்கள் தவிர, அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால், கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement