'அம்மா' உணவகங்களை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரை!: சாதம், சாம்பார், பொரியலுடன் மதிய உணவு ;இரவில் சட்னியுடன் இட்லி தர ஆலோசனை
- நமது நிருபர் -:
'அம்மா' உணவகங்களில், மலிவு விலையில் விற்கப்படும் உணவு வகைகளில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பது, மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சாதம், சாம்பார், பொரியல், ரசத்துடன் மதிய உணவு; காலை, மாலையில் இட்லியுடன் சட்னி சேர்த்து வழங்கலாம் என, தமிழக அரசுக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். விலையை சற்று உயர்த்தலாம்; மதிய உணவுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013ல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, நாட்டிலேயே முதல்முறையாக, மலிவு விலையில் உணவு வழங்கும் 'அம்மா' உணவகங்கள், சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டன. தினமும் 20 ரூபாய் செலவில், மூன்று வேளை உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்திட்டம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில், மண்டலத்திற்கு ஒன்று என இருந்த உணவகங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட, 413 இடங்களில் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் சில அம்மா உணவகங்கள் மூடப்பட்டு தற்போது, 383 உணவகங்கள் செல்பட்டு வருகின்றன.
அதன்படி, காலையில் 1 ரூபாய்க்கு 1 இட்லி, ஐந்து ரூபாய்க்கு பொங்கல்; மதியம் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம்; மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம்; இரவில் இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
நஷ்டம்
இந்த உணவகங்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக, அரிசி, கோதுமை கொள்முதல் செய்யப்படுகின்றன. மளிகை பொருட்கள், காய்கறிகள், எரிவாயு உள்ளிட்ட பொருட்கள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திடம் இருந்து பெறப்படுகின்றன.
ஆரம்பத்தில், அம்மா உணவகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக, அம்மா உணவகங்களின் சுகாதாரம், உணவின் தரம், சுவை ஆகியவை சிறப்பாக இருந்ததால், ஒரு உணவகத்தில், 200 பேர் வரை உணவருந்தினர்.
நாளடைவில் தரம், சுவை குறைவு, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால், அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர் வருகை குறைந்தது. சென்னை மாநகராட்சிக்கு அம்மா உணவகத்தால் ஆண்டுக்கு, 20 முதல் 25 கோடி ரூபாய் வரை வருவாய் வந்தாலும் இதுவரை, 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப்பின், அம்மா உணவகத்தின் தரத்தை உயர்த்த அ.தி.மு.க., அரசும், அடுத்து வந்த தி.மு.க., அரசும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சியின்போது, அம்மா உணவகத்தின் உணவு வகைகளில் மாற்றம் செய்தால், மக்கள் பயனடைவார்கள் என, அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அரசு ஏற்கவில்லை.
அம்மா உணவகங்களை பெரும்பாலும், ஆன்லைன் உணவு டெலிவரி செய்வோர், கூலி தொழிலாளிகள், குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 60 சதவீதத்துக்கு மேலான இளைஞர்கள், அம்மா உணவகத்தால் பயனடைவது, மாநகராட்சி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், புதிதாக வந்த த.வெ.க., அரசு அம்மா உணவகங்களை மேம்படுத்தவும், சுகாதாரம், உணவின் சுவையில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அம்மா உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், உணவு முறையில் மாற்றம் செய்யலாம் என, தமிழக அரசுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
பரிந்துரைகள் என்ன?
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அம்மா உணவகம் நல்ல திட்டம் என்றாலும், முறையான திட்டமிடல் இல்லை. அம்மா உணவகத்திற்கென அரசு தனியாக நிதி ஒதுக்காமல், அந்தந்த மாநகராட்சிகளே செலவு செய்ய வைத்துள்ளது.
கடந்த, 14 ஆண்டுகளாக உணவின் வகைகள் மற்றும் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. உணவகத்திற்கு இடம், வசதி இருக்கிறது. இவற்றை மேம்படுத்தினால், இளைஞர்கள், ஏழைகள் பயன் பெறுவர்.
* சமீபத்திய ஆய்வில் காலை, இரவு உணவுக்கு 10 ரூபாய்; மதிய உணவுக்கு, 15 முதல் 20 ரூபாய் வரை செலவிட, மக்கள் தயராக இருப்பது தெரிய வந்துள்ளது
*மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம் அல்லது ஊறுகாய் வழங்கலாம்
*காலையில் இட்லி, பொங்கலுக்கு தரும் சாம்பாருடன் கூடுதலாக ஒரு சட்னி கேட்கின்றனர். அதன்படி, இட்லி விலையை 2 ரூபாய் வரை உயர்த்தலாம். இரவில் சப்பாத்தி - குருமா வழங்கப்படுகிறது; இட்லி - சாம்பார் வழங்கலாம்
*மூன்று வேளைக்கும், 40 ரூபாய் வரை மக்கள் செலவிட தயராக இருக்கின்றனர். உணவு வகைகளை மாற்றி, விலையை சற்று உயர்த்துவதில் பிரச்னை இருக்காது
*உணவகங்களின் சுகாதாரத்துடனும், உணவின் தரத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்தால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்; அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். இவற்றை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முதல்வர் விஜயிடம் ஆலோசித்து, முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினசரி காலை .மதிய இரவு உணவிற்கு அறுபது ரூபாய் வாங்கி கொண்டு தரமான உணவு வழங்கலாம் இல்லையெனில் காலை ,இரவு உணவிற்கு தலா பதினைந்து ரூபாய் விலை வைக்கலாம்மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026