புத்தேரியில் கான்கிரீட் சாலை: 5 மாதங்களிலேயே விரிசல்

காஞ்சிபுரம்:புத்தேரியில் கான்கிரீட் சாலை ஐந்து மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில், புத்தேரி, ஊவேரி சத்திரம், மணியாட்சி உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன. கடந்த நிதி ஆண்டு, ஊவேரி ஊராட்சியை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்து, குளம், கான்கிரீட் சாலை, கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வந்தனர்.

இதில், புத்தேரி காலனி முதல், ஏரிக்கரை வரையில் 16.82 லட்ச ரூபாய் செலவில், புதிய கான்கிரீட் சாலை கடந்த டிசம்பரில் அமைக்கப்பட்டது. இந்த கான்கிரீட் சாலை போதிய தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது.

இதனால், கான்கிரீட் சாலை ஐந்து மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, புத்தேரி காலனி முதல், புத்தேரி ஏரிக்கரை வரை கான்கிரீட் சாலையில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement