ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு  சம்பளம் வரல: நான்கைந்து மாதங்களாக வராததால் அவதி என புகார்

மதுரை: மகளிர் திட்டத்தில் பணியாற்றும் ஊரக வாழ்வாதார இயக்க தன்னார்வலர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் அவதிப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் சார்பில் சமூக நலத்துறையின் கீழ் மகளிர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஊரக வாழ்வாதார திட்டமும் ஒன்று. இத்திட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், அவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல், சிறுதொழில் துவங்க வழிகாட்டுதல், வங்கிக் கடன்கள் பெறுவதற்கு உதவுதல் என பெண்கள் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் கிராமப்புறங்களில் எவ்வித வழிகாட்டுதலும் இல்லாத பெண்கள் சுயமாக பணிவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். கிராமப்புறங்களில் கந்துவட்டி போன்றவற்றில் சிக்காமல் தொழில் செய்ய பெண்களுக்கு இத்திட்டம் மூலம் அரசு உதவுகிறது.

இதற்காக கிராம அளவில் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநில அளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உள்ளனர். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊரக பகுதிகளில் 60 பேர், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் என 130 பேர் வரை செயல்படுகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் உண்டு.

இவர்களுக்கு மாநில அளவில் பல மாவட்டங்களில் 8 மாதங்கள் வரை சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நான்கைந்து மாதங்களாக சம்பளம் வரவில்லை. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியதாவது: ஊரகவாழ்வாதார திட்டத்தில் நிரந்தர பணியாளர்கள் கிடையாது. தன்னார்வலர்களே பணியாளராக செயல்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாகத்தான் சம்பளம் வழங்கப்படவில்லை. இத்திட்டம் வரும் ஜூலை வரை உள்ளது.

பிப்ரவரிக்கு பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாலும், நிதியாண்டு முடிந்து புதிய ஆண்டு துவக்கத்தினாலும் சென்னையில் இருந்து அறிவித்து வருவதற்கு தாமதமாகி இருக்கிறது. அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் வழங்கப்பட்டுவிடும், என்றனர்.

Advertisement