சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு

நமது நிருபர்



சிபிஎஸ்இ விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களை இந்த முறை மறு மதிப்பீடுக்காக டிஜிட்டல் முறையில் பதிவேற்றியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின், மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக ஓ.எஸ்.எம்., எனப்படும் கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த நடைமுறையில் தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். விடைத்தாள்கள் தெளிவாக தெரியவில்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை, சிபிஎஸ்இ ஒப்புக் கொண்டுள்ளது. தொழில்நுட்பங்களை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கோயெம்ப்ட் (COEMPT) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக, கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இயிடம் இருந்து விளக்கம் கேட்டு விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது. ஒப்பந்தம் வழங்கும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் உட்பட, ஒப்பந்த செயல்முறையின் முழுமையான விவரங்களை வழங்குமாறு சிபிஎஸ்இயிடம் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒப்பந்தம் வழங்குவதில் ஏற்படும் ஏதேனும் குறைபாடுகள் அல்லது முறைகேடுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுஆய்வில் நடைமுறை மீறல்கள் அல்லது ஒப்பந்தம் செயல்முறையில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement