அடையாறு முகத்துவாரத்தில் தேங்கிய மணல் திட்டால் நீரோட்டம் பாதிப்பு!: துார்வாராததால் 5 கி.மீ., வரை கழிவுநீர் தேங்கி சீர்கேடு

அடையாறு: அடையாறு முகத்துவாரத்தில் நீரோட்டத்தை சீராக்கும் வகையில், துார்வாரும் பணிகளை மேற்கொள்ளாததால், மணல் திட்டு மலை போல் குவிந்துள்ளது. இதனால், ஆற்றிற்கான நீரோட்டம் பாதிக்கப்பட்டு, 5 கி.மீ., துாரத்திற்கு கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தி அதிகமாகி, சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் திண்டாடி வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம், ஆதனுாரில் இருந்து பட்டினப்பாக்கம் வரை பாயும் அடையாறு ஆறு, 42 கி.மீ., நீளம் கொண்டது. இடத்தைப் பொறுத்து, 50 முதல் 450 மீட்டர் வரை அகலமுடைய இந்த ஆற்றில், அதிகளவில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் கொசுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆற்றுநீர் கடலில் கலக்கும் முகத்துவார பகுதி, 1 கி.மீ., அகலம் உடையது. இதில், 400 மீ., அகலத்தில் நீரோட் டம் நிலைத்திருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அலையின்போது கடல்நீர் ஆற்றில் கலப்பதால், முகத்துவாரத்தில் இருந்து, 5 கி.மீ., துாரம் வரை கொசுப்புழு உற்பத்தி குறையும். ஆகாயத்தாமரை வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும்.

நீரோட்டம் உள்ளபோது, ஆகாய தாமரையில் முட்டையிடும் கொசுப்புழுக்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதால் மாசுபாடும் குறையும்.

இதற்காக, முகத்து வாரத்தில் உருவாகும் மணல் திட்டுகள், அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பருவமழைக்கு முன் மே மாதத்தில், 400 மீ., அகலம் மற்றும் 1.5 மீ., ஆழத்தில், உறிஞ்சும் இயந்திரம் மூலம் மணல் திட்டு அகற்றப்படும்.

பிற மாதங்களில் கடல் சீற்றத்தைப் பொறுத்து, தேவையின்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த மாதம் இந்த பணி நடைபெறவில்லை.

முந்தைய ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்ததால், புதிய ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, 400 மீட்டர் அகலத்தில், 10 அடி உயரம் வரை மணல் குவிந்து, ஆற்றுநீர் கடலில் கலப்பது தடைபட்டுள்ளது.

இதனால், முகத்துவாரத்தில் இருந்து கோட்டூர்புரம் வரை கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தவிர, ஆகாய தாமரை வளர்ந்துள்ளதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, முகத்து வாரத்தில் மலைபோல் குவிந்துள்ள மணல் திட்டுகளை உடனடியாக அகற்றி, நீரோட்டத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெசன்ட் நகரில் ஆமைகள் முட்டையிட வரும் காலம், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மீனவர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முகத்துவாரப் பகுதியில் மணல் திட்டுகளை அகற்றி, நீரோட்டத்தை சீராக பராமரித்து வருகிறோம்.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பந்தம் முடிந்ததால், மே மாதத்திற்கான பணியை மேற்கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம், 20 லட்சம் ரூபாய் நிதி கிடைத்தால், ஒரு மாதம் பணி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தால் மழையை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, தென்மேற்கு பருவமழையை எதிர்பார்க்காமல், அதற்கு முன்பே முகத்துவாரப் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான நிதியை ஒதுக்குமாறு உயர் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். விரைவில் நிதி கிடைக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீதிபதிகள், அமைச்சர்களின்

குடியிருப்புகளும் பாதிப்பு

அடையாறு ஆற்றில் நீரோட்டம் இல்லாமல், 5 கி.மீ., துாரம் கழிவுநீர் தேங்கி உள்ளதால், ஆற்றின் வடக்கு திசையில் உள்ள நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்புகள் மற்றும் கிரீன்வேஸ் சாலை பகுதிகள்; தெற்கு திசையில் உள்ள காந்தி நகர், கிரசன்ட் அவென்யூ, மல்லிப்பூ நகர், கெனால் பேங்க் சாலை மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், ஆற்றில் அடர்த்தியாக வளர்ந்துள்ள ஆகாய தாமரையால் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால், நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆற்றை சுத்தமாக வைத்திருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement