நீட் தேர்வில் 658 பேர் ஆப்சென்ட் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த நீட் தேர்விற்கு 2222 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 658 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 637 ஆண்கள், 1585 பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே 3 நடந்த தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையம் அருகே சந்தேகப்படும் படி நிற்கும் நபர்கள், நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு எழுத 476 ஆண்கள், 1088 பெண்கள் என 1564 பேர் மட்டும் வந்திருந்தனர். 161 ஆண்கள், 497 பெண்கள் என 658 பேர் தேர்வு எழுதவில்லை. கடந்த மே 3 ல் நடந்த நீட் தேர்வில் 105 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், தற்போது மறுத்தேர்வில் 658 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

Advertisement