கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை 5ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் சேர்க்கை பெற கடந்த மே 29ம் தேதி வரை 10,861 பேர் விண்ணப்பித்தனர். இதில் நாளை 5ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்கள் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., விளையாட்டு பிரிவு, தேசிய பாதுகாப்பு படை மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவு) கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 10ம் தேதி அனைத்து பொது பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. பி.ஏ., தமிழ், பி.காம் வணிகவியல் பிரிவுக்கு சேர்க்கை நடக்கிறது. தொடர்ந்து வரும் 11ம் தேதி பி.எஸ்.சி., பாட பிரிவுகளான வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

அரசின் இட ஒதுக்கீடு விதிகளின் படியும், தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். இது குறித்த அறிவிப்பு கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கல்லுாரி இணைய தள தரவரிசை அடிப்படையில் அழைப்பாணை பெற்ற அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். கடந்தாண்டைவிட இவ்வாண்டு அனைத்து பாட பிரிவுகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது என கல்லுாரி முதல்வர் தர்மராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement