சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: நகரில் நுழைய நேரக்கட்டுப்பாடு அவசியம்
உடுமலை: உடுமலை நகர ரோடுகளில், கன ரக வாகனங்கள், பார்சல் சர்வீஸ் லாரிகள் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இயக்கப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் மற்றும் சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளது.
இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், பார்சல் சர்வீஸ் லாரிகள், அனைத்து நேரங்களிலும் நடு ரோட்டில் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுகிறது.
அதே போல், கன ரக வாகனங்கள், கார்கள், தளி ரோடு, பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், பல மணி நேரம் வரை, மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே, நகரிலுள்ள குறுகலாக ரோடுகளில், பெரிய அளவிலான லாரிகள் வர தடை விதிக்க வேண்டும். சரக்குகள் சிறிய வாகனங்களுக்கு மாற்றி, கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்லும் நேரங்கள், பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் இயங்கும் நேரங்களில், சரக்கு வகனங்கள், கன ரக வாகனங்கள் நகர ரோடுகளுக்கும் நுழைய தடை விதிக்க வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு இல்லாத நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில், கடைகளுக்கு சரக்கு இறக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, உரிய அறிவிப்பு பலகைகள் ரோடுகளில் வைப்பதோடு, விதி மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.