நள்ளிரவு மின் தடையால் ஆத்திரம்: திருவொற்றியூரில் சாலை மறியல்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் நள்ளிரவு ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், கார்கில் நகர் - ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், சாத்தாங்காடு மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், நள்ளிரவு வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நள்ளிரவு 12:00 மணிக்கு, சத்தியமூர்த்தி நகர் - மணலி விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார், சமரச பேச்சு நடத்தினர்.

'மின் வினியோகம் செய்தால் தான் மறியலை கைவிடுவோம்' என, அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போலீசார், இது குறித்து தெரிவித்தனர். நள்ளிரவு 1:00 மணியளவில் மின்வினியோகம் சீரானதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement