கிராவல் மண் கடத்தல் :இரு லாரிகள் பறிமுதல்

உடுமலை: உடுமலை அருகே, அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய இரு லாரிகளை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில் கனிம வளங்கள் கடத்தல் குறித்து, கனிம வளத்துறை தனி தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், தாராபுரம் ரோடு பைபாஸ் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாலப்பம்பட்டியை நோக்கி கிராவல் மண் ஏற்றி வந்த இரு லாரிகளை மறித்து, சோதனை செய்தனர். இதில், எந்த ஆவணமும் இல்லாமல், சட்ட விரோதமாக, ஆறு யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், உடுமலை போலீசில் புகார் கொடுத்தனர்.

உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரிகளை ஓட்டி வந்த உடுமலையைச்சேர்ந்த கதிர்வேல், 33, செந்தில்குமார், 32, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement