எண்ணுார் படகு குழாம் தண்ணீர் வற்றியதால் மூடல்

எண்ணுார்:அன்னை சிவகாமி நகர் ரயில்வே குளத்தில், தண்ணீர் வேகமாக வற்றி மண் திட்டுகள் தெரிவதால் படகு குழாம் மூடப்பட்டுள்ளது.

சென்னை, திருவொற்றியூர் மண்டலம், மூன்றாவது வார்டு, எண்ணுார் - அன்னை சிவகாமி நகர் பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவிலான ரயில்வே குளம், 4.62 கோடி ரூபாய் செலவில் துார்வாரி, படகு குழாம் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேயர் பிரியா, படகு குழாமை மார்ச் 1ல் திறந்து வைத்தார். இங்கு, வாட்டர் ஸ்கூட்டர், இரண்டு, நான்கு மற்றும் எட்டு பேர் பயணிக்க கூடிய, மிதி மற்றும் விசைப்படகுகள் இயக்கப்பட்டன. புதிய வரவாக, வாட்டார் ரோலர்களும் பயன்படுத்தப்பட்டன.

இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடையே இந்த படகு குழாம் நல்ல வரவேற்பை பெற்றது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், குடும்பத்தினருடன் பலரும் வந்து, படகு சவாரி மேற்கொண்டனர்.

இந்நிலையில், நீர்மட்டம் 7 - 8 அடி இருந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, ரயில்வே குளத்தில் தண்ணீர் மளமளவென வற்றி, பாதிக்கும் மேல் குறைந்தது. இதனால், ஆங்காங்கே மணல் திட்டுகள் தெரிய ஆரம்பித்தன.

இதனால், படகு சவாரிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மாநகராட்சி சார்பில், மிதவை பொக்லைன் மூலம், மணல் திட்டுகளை அகற்றும் பணி நடக்கிறது. பணிகள் முடியும் வரை, படகு சவாரி இருக்காது என, கூறப்படுகிறது.

மேலும், மணல் துார்வாரிய பின்பும், சிறிய அளவிலான படகு சவாரி மட்டுமே இயக்க முடியும் என தெரிகிறது. இதனால், சுற்றுவட்டார மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement