ஜெர்சி 'நம்பர்-10' யாருக்கு * நெய்மர்-வினிசியஸ் மோதலா
ஓஹியோ: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன பிரேசில் அணி, 'சி' பிரிவில் மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் ஜூன் 13ல் மொராக்கோ அணியை சந்திக்க உள்ளது.
இதற்கான பிரேசில் அணியில் முன்னாள் கேப்டன் நெய்மர் 34, சேர்க்கப்பட்டுள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தில் (79 கோல்) உள்ள இவர், வழக்கமாக 10ம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுவார். கடந்த 2023, அக்டோபர் முதல் சரியான 'பிட்னஸ்' இல்லாமல் தவிக்கும் இவர் எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதனால், மற்றொரு முன்னணி வீரர் வினிசியஸ் ஜூனியர், 'நம்பர்-10' ஜெர்சி அணிந்து விளையாடினார். தற்போது இருவரும் அணியில் இடம் பெற்ற நிலையில் யாருக்கு 'நம்பர்-10' ஜெர்சி கிடைக்கும் என கேள்விகள் எழுந்தன. இருவருக்கும் மோதல் என செய்தி வெளியாகின.
கடைசியில் அணி நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு, வினிசியஸ் 'ஜெர்சி' போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால், நெய்மர் 'நம்பர்-10' ஜெர்சியுடன் களமிறங்குவார். மறுபக்கம் வினிசியஸ் 'நம்பர்-7' ஜெர்சியுடன் விளையாட உள்ளார். தவிர பிரேசிலில் இருந்து கிளம்பிய போது, நெய்மர், வினிசியஸ் என இருவரும் இணைந்து ஒன்றாக காணப்பட்டனர்.