ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

7

சென்னை: 'ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரயில் ஓட்டுனர்கள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டில்லியில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரும் ஜி.டி., விரைவு ரயிலை, ஜெயராம் என்பவர் நேற்று முன்தினம் இரவு இயக்கி வந்தார். ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா அருகே வந்தபோது, ரயில் இன்ஜின் முன்பகுதி கண்ணாடி மீது, மர்ம நபர்கள் சிலர், கனமான கல் மற்றும் பாட்டில்களை வீசினர். இதில், கண்ணாடி உடைந்து, ஜெயராம் மீது விழுந்து சிதறியது.

ரத்த காயத்துடன், அவர் விஜயவாடா ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ரயில் ஓட்டுனர்கள் மற்றும் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


இது குறித்து, அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன் கூறியதாவது: ரயில் ஓட்டுனர்கள், பயணியருக்கு ஆபத்தை விளைவிக்கும் கல் வீச்சு சம்பவங்களும், கழுகு போன்ற பறவைகள், ரயில் இன்ஜின் கண்ணாடிகளில் மோதும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையாக, கண்காணிப்பு கண்ணாடியின் முன்புறத்தில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால், இது போதுமானதாக இல்லை. உடைந்த கண்ணாடி துண்டுகள் தோலையும், கண்களையும் துளைக்கக்கூடும். எனவே, இன்ஜினில் கீறல் விழாத, குண்டு துளைக்காத கண்காணிப்பு கண்ணாடிகள் பொருத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது; கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை, ரயில்கள் மீது கல்லெறி சம்பவங்கள் தொடர்பாக, நாடு முழுதும் 1,698 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட, 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டிக்கப்படுவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement