இந்தியாவுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்; நேபாள வெளியுறவு அமைச்சர் விருப்பம்

புதுடில்லி: “தொழில்நுட்பம், பொருளாதார ரீதியாக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட நேபாளம் விரும்புகிறது,” என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக, கடந்த 5ல் நம் நாட்டுக்கு வந்தார். டில்லியில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேசினார். வர்த்தகம், எரிசக்தி வினியோகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்நிலையில், இந்திய பயணம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறியதாவது: இந்தியா - நேபாளம் இடையிலான நாகரிக மற்றும் கலாசார உறவு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவுடனான உறவை அரசியல் போட்டிகளின் கண்ணோட்டத்தில், நாங்கள் பார்க்கவில்லை.

தொழில்நுட்பம், பொருளாதார ரீதியாக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்படவே நேபாளம் விரும்புகிறது. வர்த்தகம், எரிசக்தி, பொருளாதாரம் மையமாக கொண்ட வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும்.

உலக அரங்கில், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசாக இந்தியாவை பார்க்கிறோம். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினேன். அவருடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே, டிஜிட்டல் நிதி ஒருங்கிணைப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 'நேபாளம் கிளியரிங் ஹவுஸ் லிமிடெட்' மற்றும் இந்தியாவின், என்.சி.பி.ஐ., எனப்படும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் ஆகியவற்றின் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை சேவைகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக, இரு நாட்டு மக்களும், சுற்றுலா பயணியரும் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement