மருத்துவமனையில் மாணவர் கவலைக்கிடம் தவறான சிகிச்சை காரணம் என ஆர்ப்பாட்டம்

பெரியகுளம், ஜூன் 13-

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தவறுதலான சிகிச்சையால் பள்ளி மாணவர் நிவாஸ்குமார் 14. ‘கோமா’ நிலைக்கு சென்றுவிட்டதாக கூறி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த நாராயணசாமி, சுதா. இவர்களது மகன் நிவாஸ்குமார் 14. லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்தார். இவருக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஜூன் 2ல் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அதில் மூக்கில் சதை வளர்ந்துள்ளது. ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் தெரிவித்துள்ளனர். ஜூன் 6ல் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்ய மயக்கவியல் டாக்டர் ஹரிஹரன் சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சையளித்த சிறிது நேரத்தில் நிவாஸ் குமார் சுயநினைவை இழந்துள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன் ஆம்புலன்சில் தேனி மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவனின் தந்தை சில ஆண்டுக்கு முன் இறந்தார். தாய் கூலி வேலை செய்கிறார்.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:

தேனி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞர்கள் பிரவீன் குமார், பிரபு, நாகராஜன் உள்ளிட்டோர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு, ‘டாக்டர் ஹரிஹரன் தவறான சிகிச்சையால் சிறுவன் ‘கோமா’ நிலைக்கு சென்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிறுவனின் உறவினர்கள் பங்கேற்றனர்.

பிரவீன் குமார் கூறியதாவது: மாவட்ட மருத்துவமனையில் நிவாஸ்குமாருக்கு எண்டாஸ் கோப்பி குழாயை சுவாசக்குழாயில் செலுத்துவதற்கு பதிலாக உணவுக்குழாயில் செலுத்தியதாக தெரிகிறது. இதனால் நிவாஸ்குமார் ‘கோமா’ நிலைக்கு சென்றுள்ளார். டாக்டர்களின் தவறுகளை மறைக்க பார்க்கின்றனர்’ என்றார்.

மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி கூறுகையில், ‘இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறாக இருந்தால் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி (பொ) முதல்வர் டாக்டர் விஜய் ஆனந்த் கூறுகையில், ‘சிறுவன் 5 நாட்களுக்கு முன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் ஆபத்தான சூழலில் உள்ளனார். ஆனால், முன்பை விட உடல் நிலையில் நல்ல மாற்றம் காணப்படுகிறது,’ என்றார். 

--

Advertisement