ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை திறக்க வலியுறுத்தி போராட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி – கோவை ரோடு, அண்ணா நகர் பகுதியில், 3.25 ஏக்கரில், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமான பணிகள் நடைபெற்றன. அதில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை தொடர்ந்து, 14.59 கோடியில், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர், புதிய கட்டடம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல் சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். மூத்த வக்கீல்கள் மீரான் மொய்தீன், மயில்சாமி, மருதராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கோஷங்களை எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.
வக்கீல் சங்க தலைவர் கூறுகையில், ‘‘ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்க வேண்டும் என நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். அரசிடம் வலியுறுத்தினாலும் நடவடிக்கை இல்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்,’’ என்றார்.