கனவு இல்ல மானியம் 800 பயனாளிகள் தவிப்பு
திருப்பூர், ஜூன் 23–
திருப்பூர் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வரும் பயனாளிகளுக்கு மானியத் தொகை விடுவிக்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முந்தைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட 3.50 லட்சம் ரூபாய் மானியம் நான்கு தவணைகளில் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 836 பேருக்கு கடந்த மார்ச் மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது.
பல பயனாளிகள் வீடு கட்டுமானப் பணியை இறுதிக்கட்டத்திற்கு கொண்டு சென்றும், முதல் தவணைத் தொகை கூட கிடைக்காததால், பணிகளை முடிக்கவும், பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவும் சிரமப்படுகின்றனர். பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 80 பயனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து, மானியத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரினர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை கூறுகையில், ‘‘முதல் கட்டத்தில் கட்டப்பட்ட 1,436 வீடுகளுக்கான மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது; இரண்டாம் கட்ட வீடுகளின் கட்டுமான நிலையை ஆய்வு செய்து, விரைவில் மானியத் தொகை விடுவிக்கப்படும்’’ என்றார்.
–––
மானியத் தொகை விடுவிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கிய பயனாளிகள்.