பேச்சு, பேட்டி, அறிக்கை

திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா பேட்டி: துரை வைகோவிற்கும், அவரது தந்தை வைகோவுக்கும் எப்போதும் தி.மு.க., இருக்கக் கூடாது என்பதே ஆழ்மன சிந்தனை. முதல்வர் விஜய், வைகோ வீட்டிற்கு சென்றார். 'அங்குள்ளவர்கள் விசிலுக்குத்தான் ஓட்டு போட்டனர்' என, முதல்வரிடம் வைகோ அறிமுகப்படுத்துகிறார். அப்படியென்றால், கூட்டணி கட்சிக்கு உண்மையாக இல்லை என்பதை அது காட்டுகிறது. தி.மு.க., மீது இவ்வளவு வஞ்சத்தை வைத்துக் கொண்டு தந்தையும், மகனும் நாடகம் நடத்துகின்றனர்.

எப்படியாவது, தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ விலகிட்டா, அந்த கூட்டணிக்குள்ள நுழைஞ்சிடலாம்னு துடிக்கிறாரோ?


மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி:


சமீபத்தில், தமிழக அரசில் ஜோதிடர் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டது எல்லாருக்கும் தெரியும். மறுநாள் காலையில், அவரை நீக்கிவிட்டனர். 'இந்த ஜோதிடரை நம்பி தான், விஜய் அனைத்தும் செய்வார்' என, கூறினர். ஆனால், அந்த ஜோதிடருக்கே, தன் பதவி நீடிக்குமா, நீடிக்காதா என்பதை கணிக்க முடியாத சூழல்தான் இருக்கிறது. ஜோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே; அறிவியல் பூர்வமானதாக இல்லை.

வாஸ்தவம் தான்... 'தேர்தல் முடிஞ்சு, நீங்க த.வெ.க., முகாமுக்கு தாவிடுவீங்க'ன்னு, தமிழகத்தில் எந்த ஜோதிடராலும் கணித்து சொல்ல முடியலையே!


காங்., கட்சியை சேர்ந்த, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அறிக்கை: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர். இந்த சூழலில், சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தின் மீது நடத்தப்படும் நேரடி பொருளாதார தாக்குதல். தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்கள் மீது பொருளாதார சுமைகளை ஏற்றி வஞ்சிப்பதையே பாஜ., அரசு முழுநேர பணியாக செய்கிறது.

மத்தியில், 2004 முதல் 2014 வரை இவரது காங்., கட்சி ஆட்சி செய்தப்ப, பலமுறை சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை மறந்துட்டாரோ?

இந்திய கம்யூ., கட்சி முன்னாள் மாநில செயலர் முத்தரசன் பேட்டி:

மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. பா.ஜ., ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில், மாநில அரசுக்கு எதிரான போக்கை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இதன்படி, மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கும். அதனால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்; குடிநீர் பிரச்னை அதிகரிக்கும்.

இவரது வாதப்படியே பார்த்தால், கர்நாடகாவில் பா.ஜ.,வின் பரம எதிரியான காங்., ஆட்சிதானே நடக்குது... அதனால, அவங்களுக்கு சாதகமா மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்காது!

Advertisement