ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம்; சுகாதாரத்துறையை வலுப்படுத்த வழங்கியது மருத்துவ உபகரணங்கள்
புதுடில்லி: சுகாதாரத்துறையை வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகளுக்கு சிறந்த மருத்துவ உபகரணங்களை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் ராணுவ வான்வழித் தாக்குதல்கள், ஆப்கன் மக்களுக்குப் பெரும் உயிரிழப்புகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன என ஐநாவில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகளுக்கு சிறந்த மருத்துவ உபகரணங்களை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதில் மீண்டும் இந்தியா தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், சுவாசக் கருவிகள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை இந்தியா ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகளுக்குப் பரிசாக வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.