நிடி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?

புதுச்சேரி: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இருப்பினும் மாநில வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள் நிடி ஆயோக்கிற்கு அனுப்பி வலியுறுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான நிடி ஆயோக் கூட்டம், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. மாநிலங்களின் நிதித் தேவைக ள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் இக்கூட்டத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முதல்வர் கலந்துகொள்கின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிதித்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் அனைத்தும் முதல்வர் ரங்கசாமியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாகவே டில்லியில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டங்களில் அவர், பங்கேற்பதில்லை.

புதுச்சேரியின் முதல்வராக மீண்டும் ரங்கசாமி பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் அவர், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் முறைப்படி, அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்ததால், கடைசி நேரத்தில் ஏதேனும் திடீர் முடிவு எடுத்து அவர் டில்லி செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி அரசு மீதான நம்பிக்கை முதல்வர் ரங்கசாமியின் இந்த முடிவு குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டில்லியில் இன்று நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் கலந்துகொள்ளவில்லை.

புதுச்சேரியில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால், நமது மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தகுந்த நல்ல முடிவுகளை எடுக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

மேலும், புதுச்சேரி மாநிலத்தின் தேவைகள் மற்றும் விரிவான நிதிநிலை குறித்த அறிக்கை மத்திய அரசிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிதித் தேவைகளுக்கான கோரிக்கைகள் அனைத்தும் எழுத்துப்பூர்வ அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதால், நேரில் செல்லாவிட்டாலும் புதுச்சேரிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்து கொடுங்க பு துச்சேரி அரசு சார்பாக நிடி ஆயோக்கிற்கு முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். மாநிலத்தின் 10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளை வரவேற்கும் விதத்தில் சலுகைகள் தர வேண்டும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement