சமுதாய வளர்ச்சி சேவைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும், இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதல்வர் மாநில இளைஞர் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.

விருதைப் பெற 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர், இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in முகவரிக்கு ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement