பொருளாதார மண்டலங்களால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி பொருளாதார மண்டலத்தால் 10 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என,  பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியையொட்டி, புதுச்சேரிக்கான மத்திய அரசின் பங்களிப்புகள் குறித்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:

இந்திரா - ராஜிவ் சிலை 100 அடி சாலை மேம்பாலத்திற்கு ரூ.436 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டிற்காக ரூ. 92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 5,10,923 பயனாளிகள் மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். காரைக்காலில் ரூ. 491 கோடி மதிப்பில் ஜிப்மர் வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 11,226 வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 2025 வரை ரூ. 919.51 கோடி மதிப்பிலான 678 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 77,508 மீனவர்களுக்கு ரூ. 352.30 கோடி மதிப்பிலான மீன்வள மேம்பாட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 10,635 விவசாயிகளுக்கு ரூ. 36.89 கோடி நேரடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 19-வது தவணையில் 2,963 பெண் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 30,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதில் 9,600-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன.

புதுச்சேரிக்கு 75 மின்சார பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சோகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் புதுச்சேரியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. கரசூர் மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  ரூ. 20,000 கோடி முதலீடும், 10,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.

அப்போது முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, பொது செயலாளர் மோகன்குமார், செய்தி தொடர்பாளர் அருள்முருகன், ஊடக பிரிவு தலைவர் நாகேஸ்வரன் உடனிருந்தனர்.

Advertisement