முதல்வர் காலை உணவுத் திட்டம் கலெக்டர் ஆய்வு

கடலுார்: கடலுார் அருகே, உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  மற்றும் வரக்கால்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வர் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் கூறியதாவது:

 முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினால்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

கடலுார் உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வரக்கால்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், உணவு தயார் செய்யும் இடம் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சுத்தமாக மற்றும் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவது குறித்தும் அரசின் வழிகாட்டுதலின்படி தினசரி பட்டியலில் உள்ள வகையில் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கபடுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கடலுார் வரக்கால்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தயார் செய்யபட்ட காலை உணவினை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ததோடு, தினசரி வழங்கப்படும் காலை உணவின் சுவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

மேலும், தினசரி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை சுவையாகவும் மற்றும் சுகாதாரமான முறையில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement